புத்தாண்டு பிறப்பையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், பெங்களூருவில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க கர்நாடக அரசு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், “புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, சாலையில் நடக்கக் கூட முடியாமல் சுயநினைவின்றி இருப்பவர்களைக் கண்டறிந்தால், அவர்களைப் பாதுகாப்பாக மீட்டு அவர்களின் முகவரிகளைக் கேட்டு போலீசாரே வீடுகளில் கொண்டு சென்று விடுவார்கள். இதற்காக நகரம் முழுவதும் 15 இடங்களில் சிறப்பு ஓய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போதை தலைக்கேறி தள்ளாடுபவர்கள் இந்த மையங்களில் தங்க வைக்கப்பட்டு, போதை தெளிந்த பின்னர் அனுப்பி வைக்கப்படுவார்கள் அல்லது வீடுகளில் கொண்டு விடப்படுவார்கள். அதேநேரம், இந்த சலுகை அனைவருக்கும் பொருந்தாது என்றும், சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார். மேலும், பாதுகாப்புப் பணியில் 20,000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், பெண்களின் பாதுகாப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
