உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள ஒரு தனியார் பள்ளி நிகழ்ச்சியில், இளைஞர்கள் குழு ஒன்று பர்தா அணிந்து சர்ச்சைக்குரிய பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்த இந்தச் செயலுக்குக் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
அதாவது மெஸ்கோ பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், ஒரு குழுவினர் கருப்பு நிற புர்கா அணிந்து மேடையில் நடனமாடுகின்றனர். இவர்கள் சர்ச்சைக்குரிய ‘துரந்தர்’ திரைப்படப் பாடலுக்கு நடனமாடியதுடன், ஹிஜாப் மற்றும் முஸ்லிம் மத அடையாளங்களை கேலி செய்யும் வகையில் நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Location: Amroha, Uttar Pradesh (India 🇮🇳)
A video mocking Burqa/Hijab and Islam has gone viral, sparking serious outrage.
In the clip, a group of youths are seen wearing burqas and dancing to a song from the controversial film Dhurandhar, clearly ridiculing the hijab and Muslim… pic.twitter.com/9UmqrKLBPl— Team Rising Falcon (@TheRFTeam) December 30, 2025
இந்த வீடியோவை ‘டீம் ரைசிங் ஃபால்கன்’ (Team Rising Falcon) என்ற சமூக ஊடகக் குழு பகிர்ந்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “இது வெறும் பொழுதுபோக்கு அல்ல; ஒரு குறிப்பிட்ட மதத்தின் புனித அடையாளத்தைத் திட்டமிட்டு கேலி செய்யும் செயல். இது சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் விபரீத முயற்சி,” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உத்தரப் பிரதேச காவல்துறை மற்றும் அம்ரோஹா காவல்துறையினரை டேக் செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாகக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
“அடக்கத்தின் அடையாளமாகக் கருதப்படும் உடையை அணிந்து ஒரு மதத்தைக் கேலி செய்வது கண்டிக்கத்தக்கது” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
“மத அடையாளங்களை அவமதிப்பதை ஒருபோதும் சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடாது; காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இந்த விவகாரம் குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதாகக் கூறப்படும் இந்தப் பள்ளியில், இத்தகைய விபரீத நிகழ்வு நடந்தது உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
