திருவள்ளூர் அருகே முறையாக அடையாளம் காணப்படாத வேகத்தடையால் இருசக்கர வாகனத்தில் இருந்து பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கியச் சாலையில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவரை அழைத்துக்கொண்டு வேகமாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் முறையான வெள்ளை நிற எச்சரிக்கை கோடுகள் (Reflective paint) இல்லாத வேகத்தடை இருப்பதை மிக அருகில் வந்த பின்னரே அவர் கவனித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், விபத்தைத் தவிர்க்க வேண்டிச் சட்டென ‘சடன் பிரேக்’ அடித்தார்.

“>

இதில் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் தூக்கி வாரிப்போட்டதில், பின்னால் அமர்ந்திருந்த பெண் காற்றில் பறந்து சாலையில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அந்தப் பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்படும்போது விதிகளின்படி வாகன ஓட்டிகளுக்குத் தெரியும் வகையில் வண்ணம் பூசப்பட வேண்டும் என்ற விதிமுறை மீறப்பட்டதே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், நெடுஞ்சாலைத் துறையினரின் அலட்சியப்போக்கு குறித்து கடும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.