இந்தியாவைச் சேர்ந்த ஒரு அணிக்காக கபடி போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரருக்கு, பாகிஸ்தான் கபடி சம்மேளனம் (PKF) காலவரையற்ற தடை விதித்துள்ளது.
தடை விதிக்கப்பட்டுள்ள அந்த வீரர் உபைதுல்லா ராஜ்புத் என்பவராவார். அவர் சமீபத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற தனியார் கபடி போட்டி ஒன்றில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு அணிக்காக பங்கேற்று விளையாடியுள்ளார்.
அந்தப் போட்டியின் போது, இந்திய அணியின் ஜெர்சியையும் அவர் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வெளிநாட்டு அணிக்காக விளையாடுவதற்கு முன்பாக பாகிஸ்தான் கபடி சம்மேளனத்திடமிருந்து பெற வேண்டிய அனுமதி சான்றிதழ் (NOC)-ஐ உபைதுல்லா ராஜ்புத் பெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனை விதிமீறலாகக் கருதி, உபைதுல்லா ராஜ்புத்திற்கு காலவரையற்ற தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கபடி சம்மேளனம் அறிவித்துள்ளது. மேலும், சம்மேளனத்தின் அனுமதி இன்றி வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடும் வீரர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம், பாகிஸ்தான் விளையாட்டு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
