உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் இரவு கொண்டாட்டத்தின் போது, அமரும் இடம் தொடர்பான தகராறில் பெண் ஒருவரின் தலையில் பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசுதோஷ் சிட்டியைச் சேர்ந்த மஹக் குப்தா என்பவர் தனது சகோதரருடன் அந்த விடுதிக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த ஒரு கும்பலுடன் மேசை பிடிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது போதையில் இருந்த அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மஹக் குப்தாவை ஆபாசமாகத் திட்டியதுடன், திடீரெனப் பீர் பாட்டிலால் அவரது தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக ஷைனித் ஸ்ரீவஸ்தவா, சலோணி படேல் உள்ளிட்ட ஆறு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தாக்குதல் நடந்தபோது விடுதியில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் செல்ல அனுமதித்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விடுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

ரத்தக் காயங்களுடன் இருக்கும் அந்தப் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.