சேலம் அருகே கணவருடன் ஏற்பட்ட கோபத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட இருவரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகக் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி நெத்திமேடு மண்டபம் பேருந்து நிறுத்தப் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், தனியாக நின்றிருந்த அந்தப் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதோடு, அவரது கையைப் பிடித்து இழுத்துப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அபயக்குரல் எழுப்பவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (35) மற்றும் நடராஜன் (36) என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
