உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் ரெவ்னா பகுதியில், இரண்டாவது மனைவியை சமையல் வாணலியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த கணவனைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ரெவ்னா பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர், ஓராண்டுக்கு முன்பு ரோஷ்னி (24) என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
சஞ்சய்க்கும் அவரது முதல் மனைவிக்கும் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், முதல் மனைவி வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக சிறை சென்ற சஞ்சய், தண்டனை முடிந்து வெளியே வந்த பின்னரே ரோஷ்னியை மணம் முடித்துள்ளார்.
எனினும், திருமணமான நாள் முதலே ரோஷ்னியை அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.சம்பவத்தன்று, ரோஷ்னியின் சகோதரர் ராகுல் தனது சகோதரிக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ராகுல் நேரில் சென்றபோது, வீடு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கதவை உடைத்து உள்ளே சென்றபோது ரத்த வெள்ளத்தில் ரோஷ்னி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சமையலறையில் இருந்த இரும்பு வாணலியால் தலையில் பலமாகத் தாக்கப்பட்டதே ரோஷ்னியின் மரணத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலைமறைவாக உள்ள சஞ்சய் குமாரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் டி.சி.பி. டி.என். சவுத்ரி தெரிவித்துள்ளார்.
