வேல்ஸ் நாட்டின் எப்வ் வேல் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஜாக் ஹோவல்ஸ், கார் ஓட்டிச் சென்றபோது மயக்கமடைந்த தன் தாயைக் காப்பாற்றிய துணிச்சலான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிர்மிங்காம் கிறிஸ்துமஸ் சந்தைக்குத் தனது தாய் நிக்கோலா கிரம்புடன் ஜாக் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிக்கோலா, காரை ஓரம் கட்ட முயற்சிப்பதற்குள் சுயநினைவை இழந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாகச் சென்ற நிலையில், சிறுவன் ஜாக் சாதுர்யமாகச் செயல்பட்டு காரின் ஸ்டீயரிங்கைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சாலையோர புல்வெளியில் காரைப் பாதுகாப்பாக நிறுத்தினார்.
சுயநினைவு இன்றி இருந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவன், அது பலனளிக்காத நிலையில் உடனடியாக அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல்களைத் துல்லியமாகத் தெரிவித்துள்ளார். தாயின் சுவாசத்தைச் சோதித்தபடியே அவருக்குத் தைரியம் கூறிய ஜாக், மீட்புக் குழுவினர் வரும் வரை மிகவும் நிதானமாகச் செயல்பட்டார்.
இந்த விபத்தில் இருவரும் காயமின்றித் உயிர் தப்பினர். சிறுவனின் இந்தத் துரித நடவடிக்கையைப் பாராட்டிய காவல்துறையினர், அவருக்குத் தைரியத்திற்கான சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். தனது மகனின் சமயோசித புத்தியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக நிக்கோலா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
