ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தனியார் ஐடி நிறுவன பெண் மேலாளர் ஒருவரை, அதே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) உள்ளிட்ட மூவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதய்பூரைச் சேர்ந்த ஜிதேஷ் சிசோடியா என்பவரது பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மது விருந்துக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு லிப்ட் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்ற அந்நிறுவனத்தின் பெண் உயர் அதிகாரி மற்றும் அவரது கணவர் சரோஹி, சிஇஓ ஜிதேஷ் சிசோடியா ஆகியோர் திட்டமிட்டு இக்கொடூரத்தைச் செய்துள்ளனர்.

காரில் செல்லும் வழியில் மர்மப் பொருள் கலந்த சிகரெட் போன்ற ஒன்றைக் கொடுத்து அந்தப் பெண்ணை மயக்கமடையச் செய்துள்ளனர். மயக்க நிலையில் இருந்த அவரை ஜிதேஷ் சிசோடியாவும், சரோஹியும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு வீட்டின் அருகே இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். மறுநாள் மயக்கம் தெளிந்து தான் சீரழிக்கப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சிஇஓ ஜிதேஷ் சிசோடியா, சரோஹி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண் அதிகாரி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் உதய்பூர் ஐடி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.