பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்ற போர் தற்போது தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே வெளிப்படையாக வெடித்துள்ளது. சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு அன்புமணி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஜி.கே.மணி இன்று காரசாரமான பேட்டியளித்துள்ளார்.

“பாமக என்றால் ராமதாஸ் ஐயா மட்டும்தான்; கட்சியில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத அன்புமணிக்கு, 25 ஆண்டுகளாகத் தலைவராக இருக்கும் என்னை நீக்க எந்த அதிகாரமும் இல்லை” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், தகுதியே இல்லாத ஒருவரிடமிருந்து வந்த கடிதத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

அன்புமணியை அரசியலுக்குக் கொண்டு வர அன்று வாதாடியவன் நான் என்று வேதனையுடன் குறிப்பிட்ட ஜி.கே.மணி, தற்போது பாமக நிலைகுலைந்து போயிருப்பதாகக் குற்றம் சாட்டினார். “ராமதாஸ் ஐயா அன்புமணியைக் கட்சியிலிருந்து எப்போதோ நீக்கிவிட்டார்; அவரது பெயரைப் பயன்படுத்தக் கூட அன்புமணிக்குத் தகுதி இல்லை” என்று குறிப்பிட்ட அவர், ராமதாஸின் கரம் இப்போது மீண்டும் ஓங்கி வருவதாகத் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடக்கும் என்றும், அதில் முக்கியமான முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ள ஜி.கே.மணியின் இந்தப் பேச்சு, பாமக தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.