அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைவாரா அல்லது கூட்டணியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு மிகவும் மர்மமான மற்றும் மழுப்பலான பதில்களை அளித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமியின் பெயரைச் சொல்லவே தனக்கு வெட்கமாக இருப்பதாக ஓபிஎஸ் விமர்சித்திருந்தார். இது குறித்துக் கேட்டபோது, “அரசியலில் ஆயிரம் விஷயங்கள் இருக்கும்; நாலு சுவருக்குள் நடக்கும் பேச்சுவார்த்தைகளை இப்போதே வெளியில் சொல்ல முடியாது” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து இதுவரை திட்டவட்டமாக மறுத்து வந்த ஜெயக்குமார், தற்போது “எதை எப்போது சொல்ல வேண்டுமோ அப்போது சொல்வோம்; காத்திருங்கள்” என்று தனது தொனியை மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைப்பது அல்லது கூட்டணியில் சேர்ப்பது குறித்துக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் இறுதி முடிவை எடுப்பார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒரு ‘கோபுரம்’ போன்றது என்றும், அதிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ‘உதிர்ந்த செங்கற்கள்’ என்றும் முன்னதாக அவர் விமர்சித்திருந்தாலும், தற்போதைய சூழலில் ஓபிஎஸ் மீதான கோபம் குறைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு, “வாருங்கள், இருவரும் சேர்ந்து அவரிடமே (ஓபிஎஸ்) போய்க் கேட்போம்” என்று நகைச்சுவையாகப் பதிலளித்துத் தவிர்த்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடுகள் குறித்து பிப்ரவரி மாதம் அறிவிப்பு வரும்போது அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
