கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு விரைவு பேருந்தின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட கோர விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ளது. திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அந்தப் பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலைத் தடுப்பைத் தாண்டி எதிரே வந்த இரண்டு கார்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கார்களில் பயணம் செய்த 4 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 9 பேர் உடல் நசுங்கிப் பலியாகினர். விபத்தில் கார்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயின.
இந்தப் பயங்கர விபத்திற்குக் காரணமான பேருந்து ஓட்டுநர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். “அரசுப் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே இது போன்ற தொடர் விபத்துகளுக்குக் காரணம்; பேருந்துகளின் பராமரிப்பிற்காக ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது?” என அவர் கொந்தளித்துள்ளார்.
கடந்த மாதமே இது குறித்து எச்சரித்தும், பாதுகாப்பு விதிமுறைகளில் திமுக அரசு காட்டிய அலட்சியமே 9 உயிர்கள் பறிபோகக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஓட்டுநர்களின் பணிநேரம் மற்றும் பேருந்துகளின் பாதுகாப்புத் தரம் ஆகியவற்றில் நிலவும் குறைபாடுகளைச் சரிசெய்யத் தவறிய திமுக அரசே இந்த விபத்திற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
