கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள மருத்துவமனையில், நெஞ்சுவலி காரணமாகச் சிகிச்சை பெற வந்த இந்திய வம்சாவளி நபர் ஒருவர் சுமார் 8 மணி நேரம் காத்திருந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்த பிரசாந்த் ஸ்ரீகுமார் என்பவருக்குத் திடீரென கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் எட்மண்டனில் உள்ள கிரே நன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

தனக்கு உயிர் போகும் அளவுக்கு வலி இருப்பதாகவும், வலியின் தீவிரம் மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் அங்கிருந்த மருத்துவப் பணியாளர்களிடம் பலமுறை முறையிட்டார். அவருக்கு இதயத் துடிப்பு பரிசோதனை செய்யப்பட்ட போதிலும், பெரிய பாதிப்புகள் ஏதுமில்லை எனக் கூறி அங்கிருந்த ஊழியர்கள் அவரைப் பொதுக் காத்திருப்பு அறையிலேயே அமர வைத்தனர்.

சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகச் சிகிச்சையின்றித் தவித்த பிரசாந்த், இறுதியில் சிகிச்சை அறைக்குள் அழைக்கப்பட்ட சில வினாடிகளிலேயே தனது தந்தையின் கண்ணெதிரே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதே உயிரிழப்பிற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 44 வயதான பிரசாந்திற்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

அவசர சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவரை இவ்வளவு நீண்ட நேரம் காத்திருக்க வைத்த மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் அங்குள்ள இந்தியச் சமூகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், கனடாவின் அவசர காலச் சுகாதாரக் கட்டமைப்பு குறித்த விவாதங்கள் மீண்டும் முன்னெழுந்துள்ளன.