கோயம்புத்தூர் அரசியலில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு முக்கிய திருப்பம் இன்று நிகழ்ந்துள்ளது. முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் பலமான முகமுமான எஸ்.பி. வேலுமணியின் ‘வலதுகரம்’ என்று அழைக்கப்படும் வடவள்ளி சந்திரசேகர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். எம்.ஜி.ஆர் இளைஞரணியின் மாநில இணைச் செயலாளராக இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் கட்சியில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக வெளியேறினார். தற்போது, மீண்டும் தனது பழைய கூடாரத்திற்கே திரும்பியுள்ளது கோவை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

​இன்று (டிசம்பர் 25) கோவையில் நடைபெற்ற நிகழ்வில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். வேலுமணிக்கும் சந்திரசேகருக்கும் இடையே இருந்த நெருக்கமான நட்பு, இடையில் ஏற்பட்ட சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வடவள்ளி சந்திரசேகரின் வருகை கோவை மாவட்டத்தில் அதிமுகவை மேலும் வலுப்படுத்தும் என்றும், வரும் தேர்தல்களில் இது அக்கட்சிக்குச் சாதகமாக அமையும் என்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் தெரிவித்து வருகின்றனர்.