குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது பலருக்கும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, கீசர் அல்லது வாட்டர் ஹீட்டர் வசதி இல்லாத வீடுகளில், தண்ணீரை சூடாக்குவது நேரமும் உழைப்பும் அதிகம் தேவைப்படும் பணியாக உள்ளது. இந்நிலையில், குளிர்ந்த நீரில் குளிப்பதற்கான ஒரு வித்தியாசமான முறையை இளைஞன் ஒருவர் பயன்படுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் குறைந்த வளங்களைக் கொண்டு புதுமையான வழிகளை கண்டுபிடிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வரும் நிலையில், அந்த வரிசையில் இந்த வீடியோவும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வைரலாகி வரும் அந்த காணொளியில், ஒரு இளைஞன் தனது பைக்கை ஸ்டாண்டில் நிறுத்தி, அதன் பின்புற சக்கரத்தின் கீழ் தண்ணீர் நிரப்பப்பட்ட பெரிய பாத்திரத்தை வைக்கிறார்.

பின்னர், ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் கொண்டுவந்த பெட்ரோலை அந்த தண்ணீரில் ஊற்றி, தீக்குச்சியால் தீ வைத்துள்ளார். இதனால், தண்ணீரின் மேற்பரப்பில் பெட்ரோல் எரிந்து தீப்பிழம்புகள் எழுகின்றன. அதன்பின், அந்த இளைஞன் பைக்கை ஸ்டார்ட் செய்கிறார். பைக்கின் பின்சக்கரம் வேகமாக சுழலத் தொடங்கியதும், அது தண்ணீருடன் தொடர்பு கொண்டு டர்பைன் போலச் சுழன்று, பாத்திரத்தில் உள்ள தண்ணீர் தெறித்து இளைஞனின் உடலில் விழுகிறது.

ஒருபுறம் நெருப்பு தண்ணீரை சூடாக்க, மறுபுறம் பைக்கின் சக்கரம் சுழன்று சூடான நீரை நேரடியாக உடலில் பாயச் செய்கிறது. இந்த முறையின் மூலம், இளைஞன் குளிர்ந்த நீரை சூடாக்கி அதில் குளிப்பதை காணொளி காட்டுகிறது.

ஆனால், இந்த ‘முறை பலரிடையே கடும் விமர்சனத்தையும் எழுப்பியுள்ளது. பெட்ரோல் மற்றும் நெருப்பைப் பயன்படுத்தி இவ்வாறு பரிசோதனை செய்வது மிகுந்த ஆபத்தானது என்றும், எந்த நேரத்திலும் பெரிய விபத்துக்கு வழிவகுக்கும் என்றும் சமூக ஊடக பயனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த காணொளி, சமூக ஊடக தளமான எக்ஸ் (X) இல் @Sangeeta_cbe என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதை எழுதும் வரை, இந்த வீடியோ 8.79 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. வீடியோ வேகமாக வைரலாகி வருவதுடன், பலர் இதனை தவறான மற்றும் ஆபத்தான செயல் என விமர்சித்து வருகின்றனர்.