அதிமுக ஒரு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் என்றும், அதிலிருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் உதிர்ந்த செங்கற்கள் போன்றவர்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலிமையான இரும்புக் கோட்டையாகத் திகழ்வதாகவும், உதிர்ந்த செங்கற்களைப் பற்றி கோபுரத்திற்கு எந்தக் கவலையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஓபிஎஸ் மற்றும் தினகரனை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்த முடிவுகளைப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் எடுப்பார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டம் குறித்துப் பேசிய ஜெயக்குமார், மகாத்மா காந்தியின் பெயரை அத்திட்டத்திலிருந்து நீக்கக் கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்தத் திட்டத்தில் மத்திய அரசு எந்தவிதக் கெடுபிடிகளையும் புகுத்தக் கூடாது என்றும், விவசாயத் தொழிலாளர்களின் நலன் கருதி இத்திட்டம் பழைய முறைப்படியே தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.