மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது திருமணக் காரை பூக்களுக்குப் பதிலாக பிஸ்கட் பாக்கெட்டுகளைக் கொண்டு அலங்கரித்து சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பொதுவாக திருமணக் கார்கள் ரோஜாக்கள் மற்றும் இதர மலர்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த மணமகன் தனது வருங்கால மனைவிக்கு பிஸ்கட் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும் என்பதால், அவரது விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக கார் முழுவதும் நூற்றுக்கணக்கான பிஸ்கட் பாக்கெட்டுகளை ஒட்டி இந்த வினோத அலங்காரத்தைச் செய்துள்ளார்.’

இந்த வித்தியாசமான அலங்காரத்தின் புகைப்படங்கள் எக்ஸ்  தளத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அவை மிக வேகமாக வைரலாகி வருகின்றன. இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும், “தனது துணையின் சிறிய ஆசைகளைக்கூட மதிக்கும் இவரே சிறந்த கணவர்” என்று பாராட்டி வருகின்றனர்.

அதே சமயம், டிராஃபிக் சிக்னல்களில் நிற்கும் போது யாரும் பிஸ்கட்களை எடுத்துச் செல்லாமல் பாதுகாப்பது கடினம் எனச் சிலர் நகைச்சுவையாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, மணமகனின் இந்த புதுமையான காதல் முயற்சி தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.