புத்தாண்டு மற்றும் ஜனவரி மாதத் தொடக்கத்தில் திருப்பதிக்குச் செல்லத் திட்டமிடும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சில முக்கியமான கட்டுப்பாடுகளையும் வசதிகளையும் அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை, இலவச தரிசனத்திற்கு முன்பதிவு செய்த டோக்கன் வைத்துள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்த இந்த மூன்று நாட்கள் ‘டோக்கன்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

​ஆனால், ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையிலான ஏழு நாட்கள் எவ்வித டிக்கெட்டுகளும் தேவையில்லை; பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு வந்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்கி ஏழுமலையானை இலவசமாகத் தரிசிக்கலாம். இது குறித்துப் பேசிய தேவஸ்தான அதிகாரி அனில் குமார் சிங்கால், “பக்தர்களைத் திருப்பதி மலைக்கு வரக்கூடாது எனத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை” எனக் கூறி, பக்தர்கள் தாராளமாக வந்து வழிபடலாம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.