ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில், மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் கேமரா வசதியுள்ள மொபைல் ஃபோன்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, காசிபூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமூக கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இந்த கூட்டம், அந்த கிராமங்களின் தலைவர் சுஜ்னராம் சவுத்ரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, பெண்கள் ஸ்மார்ட்போன்களுக்கு பதிலாக கீபேட் ஃபோன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தடை, ஜலோர் மாவட்டத்தின் காஜிபுரா, பாவ்லி, கல்ரா, மனோஜியாவாஸ், ராஜிகாவாஸ், டட்லாவாஸ், ராஜ்புரா, கோடி, சிட்ரோடி, அல்ரி, ரோப்சி, கானாதேவல், சாவிதர், பின்மாலின் ஹாத்மி கி தானி மற்றும் கான்பூர் உள்ளிட்ட 15 கிராமங்களில் அமல்படுத்தப்பட உள்ளது.
राजस्थान : जालोर जिले के 15 गांवों की महिलाएं और लड़कियां अब स्मार्टफोन का इस्तेमाल नहीं कर सकेंगी
जिला पंचायतों ने जारी किए आदेश, जहां उन्हें केवल कीपैड वाले फोन रखने की ही इजाजत होगी
26 जनवरी से लागू होंगे नियम pic.twitter.com/IL4TJNCuIW
— Gaurav Shukla (@shuklaagaurav) December 23, 2025
மேலும், பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் கல்வி தேவைக்காக மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டியிருந்தால், அவற்றை வீட்டிற்குள் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள், சமூக நிகழ்ச்சிகள் அல்லது பக்கத்து வீட்டிற்குச் செல்லும் போதும் கூட மொபைல் போன்களை எடுத்துச் செல்லக் கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்த கிராமத் தலைவர் சுஜ்னராம் சவுத்ரி,
“வீடுகளில் பெண்களின் மொபைல் போன்களை குழந்தைகள் அதிகமாக பயன்படுத்துவதால், அவர்களின் பார்வைத்திறன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த கிராமங்களில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய சமூக விதிமுறைகள் அடிக்கடி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2024-ஆம் ஆண்டு, ஒரு இளம் ஜோடி காதல் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அந்த ஜோடியின் இரு குடும்பங்களையும் கிராமத்திலிருந்து ஒதுக்கிவைக்க கிராமத் தலைவர்கள் உத்தரவிட்டனர். மேலும், மீண்டும் ஊருக்குள் நுழைய ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த ஜோடி காவல்துறையை அணுகியதைத் தொடர்ந்து, போலீசார் தலையிட்டு பெரும்பாலான கிராம மூத்தவர்களுடன் சமரசம் செய்து வைத்தனர். இருப்பினும், சிலர் அந்த ஒதுக்கீட்டை நியாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த கிராமங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
