2026-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் தொடக்க வீரராகவும், முதன்மை விக்கெட் கீப்பராகவும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில், ஃபார்ம் அவுட் காரணமாகத் துணை கேப்டன் பதவியிலிருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தைப் பாராட்டியுள்ள முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அவருக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். இது குறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், சஞ்சு சாம்சன் தற்போது சிறப்பாக விளையாடினாலும், 30 அல்லது 40 ரன்களில் ஆட்டமிழப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

“குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தால் மக்கள் உங்களை விரைவில் மறந்து விடுவார்கள். எனவே அந்த 37 ரன்களை 73 ரன்களாக மாற்றப் பழகிக்கொள்ளுங்கள். பெரிய ரன்களைக் குவித்தால் மட்டுமே உங்களை யாராலும் அணியிலிருந்து நீக்க முடியாது” என்று அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் தற்போதைய இந்திய அணியின் பேட்டிங் வரிசை 8-வது இடம் வரை மிக வலிமையாக உள்ளதாகவும், சூர்யகுமார் யாதவ் மட்டும் பழைய ஃபார்முக்குத் திரும்பினால் இந்திய அணி எப்பேர்ப்பட்ட எதிரணியையும் சிதறடிக்கும் என்றும் ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.