உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கைக் கரையில் இயற்கை எழில் சூழ நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத விருந்தினராகப் புகுந்த குரங்கு ஒன்று செய்த அட்டகாசங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆற்றங்கரையில் திறந்தவெளியில் மணமக்கள் சடங்குகளைச் செய்து கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த குரங்கு ஒன்று மணமேடையில் ஏறி அங்கிருந்த பழங்களைத் திருடியதோடு, மணமக்கள் மற்றும் அர்ச்சகர் அருகில் அச்சமின்றி வலம் வந்தது.
View this post on Instagram
ஒரு கட்டத்தில் விருந்தினர்களுக்காக வைக்கப்பட்டிருந்த உணவுகளையும் தின்று தீர்த்த அந்தக் குரங்கை, அங்கிருந்தவர்கள் எவ்வித இடையூறும் செய்யாமல் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அமைதியாகத் தொடங்கிய அந்தத் திருமண நிகழ்வு, சில நிமிடங்களிலேயே குரங்கின் குறும்புத்தனத்தால் கலகலப்பான சூழலாக மாறியது.
இந்த நிகழ்வை அங்கிருந்தவர்கள் தங்களது கைபேசியில் படம்பிடிக்க, அந்த வீடியோ தற்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வருகிறது. ரிஷிகேஷ் போன்ற புனிதத் தலங்களில் குரங்குகள் நடமாட்டம் என்பது இயல்பான ஒன்று என்றாலும், திருமண மேடையிலேயே அவை புகுந்து உணவுகளை உண்பது வினோதமான காட்சியாகப் பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பலரும், “கடவுள் அனுமனே நேரில் வந்து மணமக்களை ஆசிர்வதிப்பதாக” நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், “இது போன்ற திறந்தவெளி இடங்களில் சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது இயற்கை மற்றும் வனவிலங்குகளின் குறுக்கீடு இருக்கும் என்பதைத் திட்டமிடுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்விதத் திட்டமிடலும் இன்றி அமைந்த இந்தச் சுவாரசியமான தருணம், அந்தத் திருமணத்தை என்றும் மறக்க முடியாத ஒன்றாக மாற்றியுள்ளது.
