திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் வீதியில் இறங்கிப் போராடி வரும் நிலையில், அடுத்த தேர்தலுக்கான அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளதை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு அளித்த 400-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளையே இன்னும் நிறைவேற்றாமல், மீண்டும் ஒரு புதிய அறிக்கையைத் தயாரிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று அவர் சாடியுள்ளார். ரோம் நகரம் பற்றி எரியும்போது மன்னன் நீரோ பிடில் வாசித்த கதையாக இந்த அரசின் செயல்பாடு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களை திசைதிருப்பும் வகையில் செயல்படும் திமுகவின் இந்த “தேர்தல் அறிக்கை நாடகக் கம்பெனி” விரைவில் திவாலாகும் என்றும், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றும் கூடாரத்தைத் தமிழக மக்கள் விரைவில் கலைத்தெறிவார்கள் என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நிறைவேற்றப்படாத பழைய வாக்குறுதிகளை மறைத்துவிட்டு, மீண்டும் புதிய டுபாக்கூர் வாக்குறுதிகளுடன் மக்களைச் சந்திக்கத் திட்டமிடும் திமுகவிற்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என அவர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
