நைஜீரியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மாணவர் விசாவில் இந்தியாவிற்கு வந்து, காதல் வலையில் பெண்களை வீழ்த்தி அவர்களைப் போதைப்பொருள் விற்பனை செய்யும் ஏஜென்டுகளாக மாற்றிய அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த அந்த வாலிபர், ஐதராபாத், பெங்களூரு மற்றும் கோவா என மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்துள்ளார்.
இதுவரை ஆறு இளம் பெண்களைத் திருமணம் செய்துள்ள அவர், அவர்களுக்குப் போதைப்பொருட்களைப் பழக்கப்படுத்தித் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார். போதைக்கு அடிமையான பெண்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாகப் போதைப்பொருள் வழங்கி, பின்னர் அவர்களையும் விற்பனையாளர்களாக மாற்றும் தந்திரத்தைக் கையாண்டுள்ளார்.
போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு எடுத்து இந்தச் சட்டவிரோதத் தொழிலை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், ஐதராபாத் அருகே உள்ள கொம்பலி பகுதியில் செவிலியர் ஒருவர் போதைப்பொருள் விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பிடிபட்ட செவிலியரிடம் நடத்திய விசாரணையில், அவர் நைஜீரிய வாலிபரின் காதலில் விழுந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
விற்பனையின் போது போலீசாரிடம் சிக்காமல் இருக்க ‘கடல் பச்சை’, ‘ஸ்கோர்’ போன்ற ரகசியக் குறியீடுகளை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். செவிலியரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து நைஜீரிய வாலிபரையும் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற பெண்களையும், அவர்களுக்குப் பின்னணியில் உள்ள சர்வதேச போதைப்பொருள் கும்பலையும் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
