தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தவெக-வை ‘பால்வாடி கட்சி’ மற்றும் ‘தவழும் குழந்தை’ என விமர்சித்த அமைச்சர் சேகர் பாபுவுக்கு அவர் காரசாரமாகப் பதிலடி கொடுத்தார்.
“தவழும் குழந்தைகள் தான் வளர்ந்து பெரியவர்கள் ஆவார்கள். பெரியவர்கள் ஆன பிறகு தான் அவர்கள் தன்னாட்சி நடத்துவார்கள்” எனத் தெரிவித்த அவர், தவெக விரைவில் தமிழக அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்பதை சூசகமாக உணர்த்தினார்.
கடந்த 18-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டம், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டமாக அமைந்ததாக செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
சுமார் 3 லட்சம் பேர் கலந்துகொண்ட அந்த மாநாட்டைத் தொடர்ந்து, அடுத்தகட்டப் பணிகள் குறித்து இன்று மாலை கட்சித் தலைவர் விஜய்யுடன் அவர் ஆலோசிக்க உள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அடுத்த மாநாடு எந்த மாவட்டத்தில் நடைபெறும் என்பது அறிவிக்கப்படும். மேலும், “பொங்கலுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் வரப்போகிறது, அதை நீங்களே காண்பீர்கள்” எனக்கூறி தவெக-வின் தேர்தல் ஆயத்தப் பணிகள் தீவிரமாக இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
