பள்ளி நிகழ்ச்சி ஒன்றின் போது எதிர்பாராத விதமாகத் தனது தலைமுடியில் தீப்பற்றிய நிலையிலும், சிறிதும் பதற்றமடையாமல் அந்தச் சூழலை மிகவும் சாமர்த்தியமாகக் கையாண்ட பள்ளி மாணவியின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொலி, இதுவரை சுமார் 6 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Kenneth Perez (@kperezthree)

கென்னத் பெரெஸ் என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், அவரது உறவினரான அந்த மாணவி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மேடையில் நின்றுகொண்டிருக்கிறார். அப்போது அவரது நீண்ட தலைமுடி மெழுகுவர்த்தி சுடரில் பட்டு திடீரெனத் தீப்பற்றத் தொடங்குகிறது.

சற்றும் எதிர்பாராத இக்கட்டான இச்சூழலில் அலறவோ அல்லது பயந்து ஓடவோ செய்யாமல், அந்த மாணவி தனது கைகளாலேயே அமைதியாகத் தீயைத் தட்டி அணைத்துவிட்டு, எதுவுமே நடக்காதது போல நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றார்.

இந்தத் துணிச்சலான செயலைக் கண்ட இணையவாசிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். “இக்கட்டான நேரத்தில் அவர் காட்டிய நிதானம் நம்ப முடியாத அளவிற்கு உள்ளது” என்றும், “அழகும் அறிவும் கலந்த ஆளுமை” என்றும் அந்த மாணவியைப் பாராட்டி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் பகிர்ந்த அவரது உறவினர் கென்னத், “மேடையில் ஏற்பட்ட இந்தச் சிறிய விபத்தை அவர் மிகவும் நேர்த்தியாகக் கையாண்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்த உதவினார்” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ஆபத்தான நேரத்தில் எவ்வாறு அமைதியாகச் செயல்பட வேண்டும் என்பதற்கு இந்தச் சிறுமி ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்வதாக நெட்டிசன்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.