மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில், ஹோட்டல் அறையைத் தவறாகத் தட்டிய 30 வயது பெண் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வரும் அந்தப் பெண், தனது குடும்பப் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பண உதவி கோரி 105-ஆம் எண் அறையில் தங்கியிருந்த தனது நண்பரைச் சந்திக்கச் சென்றுள்ளார்.
அங்கு சிறிது நேரம் கழித்து கைபேசியில் பேசுவதற்காக வெளியே வந்தவர், மீண்டும் அறைக்குத் திரும்பும்போது ஏற்பட்ட குழப்பத்தினால் தவறுதலாக இரண்டாவது மாடியில் உள்ள 205-ஆம் எண் அறைக் கதவைத் தட்டியுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த கன்ஷ்யாம் பௌலால் ரத்தோர், ரிஷிகேஷ் துளசிராம் சவான் மற்றும் கிரண் லட்சுமண் ரத்தோர் ஆகிய மூன்று நபர்களும், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக அறைக்குள் இழுத்துச் சென்று மது அருந்துமாறு வற்புறுத்தியுள்ளனர்.
அன்று இரவு முழுவதும் அந்தப் பெண் மூன்று நபர்களாலும் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிகாலை 3 மணி அளவில் அந்த கும்பலிடமிருந்து தப்பித்து அலறியபடி வெளியே ஓடி வந்த அந்தப் பெண், உடனடியாக வேதாந்த் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற காவல்துறை அதிகாரிகள், சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஹோட்டலில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதன் அடிப்படையில், தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போலீசார், குற்றம் நடந்த மூன்று மணி நேரத்திற்குள்ளேயே தலைமறைவாக இருந்த மூன்று குற்றவாளிகளையும் அதிரடியாகக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
