மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள படாமல்கேரா அரசு கல்லூரியில், வகுப்பறையில் பாலிவுட் பாடல் ஒன்றிற்கு மூன்று மாணவிகள் நடனமாடி ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வகுப்பறை பெஞ்ச் மீது ஏறி நின்று ஆபாசமான முறையில் நடனமாடியதுடன், அதனை வீடியோ எடுத்து பதிவேற்றியது கல்வி நிலையத்தின் ஒழுக்கத்திற்கு எதிரானது எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தை தீவிரமாக முன்னெடுத்த கல்லூரி முதல்வர் அங்கூர் திவாரி, கல்லூரி என்பது கல்வி கற்பதற்கான இடமே தவிர, சமூக வலைதளங்களுக்காக வீடியோ எடுக்கும் இடமல்ல என்று சாடினார்.
இதனைத் தொடர்ந்து, கல்லூரி வளாகத்திற்குள் மொபைல் போன் பயன்படுத்தக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், 75 சதவீத வருகைப்பதிவு, அடையாள அட்டை கட்டாயம் மற்றும் வெளியாட்களை அனுமதிக்கும் முன் முன்அனுமதி பெற வேண்டும் போன்ற புதிய விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
விதிகளை மீறுபவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
