நாகாலாந்து மாநிலம் திமாபூர் இரயில் நிலையத்தில் மஹிந்திரா தார் வாகனம் ஒன்று தண்டவாளத்தில் ஓட்டிச் செல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த புதன்கிழமை இரவு சுமார் 11:30 மணியளவில், திமாபூர் நிலையத்தின் ஒன்றாவது நடைமேடைக்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் இந்த கருப்பு நிற தார் வாகனம் திடீரென தோன்றியதைக் கண்டு அங்கிருந்த பயணிகள் பெரும் அதிச்சியடைந்தனர்.
இரயில்கள் வரும் பாதையில் சாலை வாகனத்தை ஓட்டிச் சென்ற இந்த ஆபத்தான செயல், இரயில்வே பாதுகாப்பு குறித்த பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. தகவலறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த இரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூர் போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த தெஃபுனிதுவோ என்ற நபரை கைது செய்து வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
View this post on Instagram
“>
இந்த விபரீத செயலால் இரயில்வே சொத்துக்களுக்கோ அல்லது பயணிகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது நிம்மதியளிக்கும் செய்தியாகும். அந்த நபர் போதையில் இருந்தாரா அல்லது சமூக வலைதள வீடியோக்களுக்காக இத்தகைய ஆபத்தான செயலில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், ‘ஆஃப் ரோடிங்’ செய்வதற்கும் தண்டவாளத்தைப் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் தெரியாதா என ஓட்டுநரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
