த.வெ.க. தலைவர் விஜய், அண்மையில் ஈரோட்டில் பேசுகையில் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் தமிழகத்தின் பொதுச் சொத்து என்றும், அவர்களின் பெயரைப் பயன்படுத்த யாருக்கும் தனி உரிமை இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், அதிமுகவில் இருந்த செங்கோட்டையன் தங்களது கட்சியில் இணைந்தது பெரிய பலம் என்றும், அவரைப் போல இன்னும் பலர் இணையப் போகிறார்கள் என்றும் விஜய் பேசியிருந்தார்.
விஜய்யின் இந்தப் பேச்சு அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தனது கட்சித் தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக விஜய் இப்படிப் பேசி வருவதாகக் கூறினார்.
செங்கோட்டையனை நம்பி இதுவரை யாரும் தவெக-வில் சேரவில்லை என்றும், இனிமேலும் சேரமாட்டார்கள் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். குறிப்பாக, கரூரில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு விஜய்யின் பேச்சில் நிறைய மாற்றங்கள் தெரிவதாகவும், பாதை தவறிச் செல்பவர்களால் சரியான அரசியல் பாதையை உருவாக்க முடியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
