உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலை சம்பவம் நாடு முழுவதையும் அதிர வைத்துள்ளது.
ஓரா கைமேரா சொசைட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் தீப்ஷிகா சர்மா, தனது வாடகைதாரர்களான அஜய் குப்தா மற்றும் அவரது மனைவி ஆகிருதி குப்தாவிடம் பல மாதங்களாக நிலுவையில் இருந்த வாடகைப் பணத்தைக் கேட்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில், அந்தத் தம்பதியினர் தீப்ஷிகாவைத் திட்டமிட்டுப் படுகொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு சூட்கேஸில் அடைத்து மறைத்து வைத்திருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நேரம் கடந்தும் தீப்ஷிகா வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது வீட்டு வேலைக்காரி, அவர் சென்றிருந்த வாடகை வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார்.
அங்கு ரத்தக் கறை மற்றும் சந்தேகத்திற்கிடமான சூழலைக் கண்டு தேடியபோது, ஒரு அறையில் இருந்த சிவப்பு நிறப் பைக்குள் தீப்ஷிகாவின் உடல் துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்துத் தகவலறிந்த நந்தகிராம் போலீஸார் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றினர். கடந்த 5 – 6 மாதங்களாக வாடகை கொடுக்காத ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததை ஒப்புக்கொண்ட வாடகைதாரர் தம்பதியை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
