பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், 1200 ஆயுஷ் மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் நிதிஷ் குமார், மேடையிலேயே ஒரு பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக கீழே இழுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பணி நியமன ஆணை பெற வந்த அந்தப் பெண் மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்த போதே, திடீரென அவரது தலையை மூடியிருந்த ஹிஜாப்பை நிதிஷ் குமார் அகற்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள், மாநிலத்தின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் பொது மேடையிலேயே இவ்வாறு கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது என்றும், முதலமைச்சரின் மனநிலை குறித்துச் சந்தேகம் எழுவதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் மெகபூபா முப்தி மற்றும் ஓமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களும் நிதிஷ் குமாரின் செயலுக்குத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நிதிஷ் குமாரின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பணி நியமன ஆணை பெற வரும்போது முகம் தெரிய வேண்டும் என்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும், இது ஒன்றும் இஸ்லாமிய நாடு கிடையாது என்றும் கூறி சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, உத்தரப் பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், நிதிஷ் குமாரின் செயலை நியாயப்படுத்தும் நோக்கில் பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் மிக மோசமான சொற்களைப் பயன்படுத்திப் பேசியதற்காக அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதலமைச்சரின் இத்தகைய போக்கால் பீகார் அரசியலில் பரபரப்பு தொற்றியுள்ள நிலையில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் மத உணர்வுகள் சார்ந்த விவாதங்கள் தேசிய அளவில் கவனம் பெற்று வருகின்றன.