அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், உலகப்புகழ் பெற்ற வீரருமான லயோனல் மெஸ்ஸி, தனது மூன்று நாள் இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாகக் கொல்கத்தா, ஐதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கொல்கத்தாவில் தனது உருவச் சிலையைத் திறந்து வைத்த மெஸ்ஸி, பின்னர் ஐதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் இணைந்து கால்பந்து ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மெஸ்ஸியைச் சந்தித்து, தனது கையெழுத்திட்ட 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை சீருடையை நினைவுப் பரிசாக வழங்கினார். மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் இந்தியக் கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு, விளையாட்டு ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத விருந்தாக அமைந்தது.

தனது பயணத்தின் இறுதி நாளான இன்று டெல்லி சென்ற மெஸ்ஸிக்கு, அருண் ஜெட்லி மைதானத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட் அணியின் பத்தாம் எண் கொண்ட சீருடையை மெஸ்ஸிக்குப் பரிசளித்து கௌரவித்தார்.

இப்பயணத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாக, தொழிலதிபர் ஆனந்த் அம்பானி மெஸ்ஸியைச் சந்தித்து சுமார் 10.91 கோடி ரூபாய் மதிப்பிலான ‘ரிச்சர்ட் மில்’ ரக கைக்கடிகாரத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

ஆசிய எடிஷன் வகையைச் சேர்ந்த இந்தக் கைக்கடிகாரம் உலகிலேயே வெறும் 12 எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மண்ணில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் சங்கமித்த இந்த மூன்று நாள் பயணத்தின் காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.