அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காகச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உணவகத்தில் கொள்ளை நடந்ததாகப் பொய் புகாரளித்த ஊழியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு உணவகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் இணைந்து, முகமூடி அணிந்த மர்ம நபர் உணவகத்திற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயல்வது போன்ற புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கித் தங்கள் உரிமையாளருக்கு அனுப்பியுள்ளனர்.

அந்தப் புகைப்படத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், உடனடியாக இது குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உணவகத்தில் கொள்ளை முயற்சி ஏதும் நடைபெறவில்லை என்பதும், டிரெண்டிங்கில் இடம் பிடிப்பதற்காக ஊழியர்களே திட்டமிட்டு இத்தகைய போலியான புகைப்படத்தை உருவாக்கியதும் அம்பலமானது.

உண்மை தெரிந்தவுடன் அங்கிருந்த ஒரு ஊழியர் தப்பியோடிய நிலையில், மற்றொருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்துத் தீவிரமாக விசாரித்து வருவதாகத் தெரிவித்த காவல்துறையினர், இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.