கர்நாடக மாநிலம், பெங்களூருவின் குண்டலஹள்ளி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், நண்பர்கள் 8 பேருடன் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அங்கு மூன்று அறைகளை முன்பதிவு செய்த அவர்கள், அதிகச் சத்தத்துடன் பாடி நடனமாடியதால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அந்த இளைஞர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. “பணம் கொடுக்கவில்லை என்றால் கைது செய்வோம்” என்று காவல்துறையினர் மிரட்டியதால், பணம் செலுத்துவதாக இளைஞர்கள் ஆன்லைனில் தெரிவித்தனர். ஆனால், காவல்துறையினர் ரொக்கமாகக் கேட்டதால், ஒரு இளைஞர் ஏடிஎம் சென்று பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
இதற்கிடையில், காவல்துறையினர் மிரட்டியதால் பயந்துபோன அந்த இளம்பெண், உணவக அறையின் பால்கனியில் இருந்து கீழே குதித்தார். உணவகத்தின் சுற்றுச்சுவரில் இருந்த இரும்புக் கம்பியில் சிக்கிய அவருக்குத் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தவெள்ளத்தில் துடித்தவரை நண்பர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அந்த இளம்பெண்ணின் தந்தை காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்தை ஆய்வு செய்ததுடன், பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் காவல்துறையினர் பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
