உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹர்ஷிதா டாடோ என்ற பெண்மணி, தனது மாமனாரின் முதல் விமானப் பயண அனுபவம் குறித்த காணொலியைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தக் காணொலியில், முதல்முறையாக விமானத்தில் ஏறிய தனது மாமனாரின் வெகுளித்தனமான பதட்டத்தையும், மருமகள் ஹர்ஷிதாவுடன் அவர் கொண்டிருக்கும் பாசப்பிணைப்பையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
View this post on Instagram
விமான நிலையத்திற்கு வந்தபோது, விமானம் புறப்படத் தொடங்கிய நேரத்தில் தனது மாமனார், “இது கீழே விழுந்துவிடுமா? கீழே விழுந்துவிடுமா?” என்று பதற்றத்துடன் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்ததாக ஹர்ஷிதா விவரிக்கிறார்.
தனது மாமனார் வாழ்க்கையில் ஹாக்கி விளையாடியது, இளம் வயதில் பல சண்டைகளில் ஈடுபட்டது என எல்லாவற்றையும் செய்திருந்தாலும், விமானத்தில் மட்டும் ஏறியதில்லை என்றும், இன்று அவரது கனவை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பொதுவாக, தந்தை-மகள் பாசப்பிணைப்பைப் பாராட்டும் இணையவாசிகள், இந்த மாமனார்-மருமகள் இடையேயான அன்பான பிணைப்பைக் கண்டு நெகிழ்ந்துபோய், “உங்களைப் போன்ற மருமகள் எல்லோருக்கும் அமைய வேண்டும்,” என்றும், “உங்கள் மாமனாரின் வெகுளித்தனமான இந்த எதிர்வினை மனதைக் கவர்கிறது” என்றும் கருத்துத் தெரிவித்து, இந்த காணொலிக்கு அன்பைப் பொழிந்து வருகின்றனர்.
