சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த 31 வயதான அந்தோணி மாதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 2015ஆம் ஆண்டு யோவான் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கணவரைப் பிரிந்து அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் தனது 10 மற்றும் 8 வயது மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
2021ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தபோது, அவருடன் பணியில் சேர்ந்த மற்றொரு ஆண் உதவி ஆய்வாளருடன் அந்தோணி மாதாவுக்குப் பழக்கம் ஏற்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நெருக்கமாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தச் சக உதவி ஆய்வாளர், அந்தோணி மாதாவிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டதால், அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு அந்தோணி மாதா அந்த உதவி ஆய்வாளருக்குக் காணொலி அழைப்பு விடுத்து, உடனடியாக தன்னை வந்து பார்க்குமாறு வற்புறுத்தியுள்ளார். அவர் மறுக்கவே, தன்னை பார்க்க வரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியுள்ளார். இதற்கு முன்னரும் அடிக்கடி அவர் மிரட்டி வந்ததால், அந்த உதவி ஆய்வாளர் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், செல்போன் இணைப்பைத் துண்டித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் அந்தோணி மாதாவுக்கு அழைத்தபோது, அவர் செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்து அம்பத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, அந்தோணி மாதாவின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த காவல்துறையினர், அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவரது உடலைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிய காவல்துறை, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே, பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை வழக்கில், அந்தோணி மாதாவின் குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் மீஞ்சூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ரஞ்சித் என்பவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தந்தையைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது தாயையும் இழந்த அந்தோணி மாதாவின் இரண்டு மகன்களும் தவித்து வருவது சக காவலர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
