கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பிரபல நடிகை கடத்தல் மற்றும் பாலியல் வன்முறை வழக்கில், ஏறக்குறைய 9 ஆண்டுகள் நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நடிகர் திலீப்பை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து எர்ணாகுளம் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை அடுத்து, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீளமான மற்றும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்து தான் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கில் மிக முக்கியமான ஆதாரமாகக் கருதப்பட்ட மெமரி கார்டு, நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோதே மூன்று முறை சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தனது பதிவில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த வழக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு முதலே விசாரணை சரியான பாதையில் செல்லவில்லை என்று தான் உணர்ந்ததாகவும், அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் இருவர் கூட நீதிமன்றத்தின் செயல்பாடு எதிர்ப்பானதாக உள்ளது என்று கூறி பதவி விலகியதாகவும் பாதிக்கப்பட்ட நடிகை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றக் கோரி தான் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தலையிடும்படி எழுதிய கடிதங்களும் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஆறு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்ததில் ஒரு சிறிய ஆறுதல் உள்ளதாகவும், மனிதர்களின் தவறான அபிப்ராயங்கள் எவ்வாறு நீதியைத் தீர்மானிக்க முடியும் என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எத்தனை தடைகள் வந்தாலும், தனக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப் போவதாக அவர் உறுதியுடன் கூறியுள்ளார்.