திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோக்கியம் பகுதியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. கூலி வேலை செய்து வரும் மதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த சூழலில், அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒரு பெண்ணுடன் மதிக்கு ஏற்பட்ட நட்பு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நீடித்த இந்த நெருக்கமான உறவில், இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், அண்மைக்காலமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்பெண் கடந்த மூன்று மாதங்களாக மதியுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற மதி, அப்பெண்ணுடன் பேச வலியுறுத்தியுள்ளார். முதலில், “என்னுடன பேசவில்லையென்றால் கொலை செய்து விடுவேன்” என மிரட்டி, தோக்கியம் பகுதியில் கத்தியுடன் சுற்றி வந்துள்ளார்.

இதையடுத்து, பெண்ணைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மதி, “நீ என்னுடன் தொடர்ந்து பேசவில்லை என்றால், நாம் தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்” என மிரட்டியதாகத் தெரிகிறது. மிரட்டல் காரணமாக மனமுடைந்த அப்பெண், இந்த விவகாரம் குறித்து உடனடியாக கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, மதியைத் தீவிரமாக விசாரித்தனர். ரகசிய காதலி பேச மறுத்ததால், தனிப்பட்ட வீடியோக்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டிய குற்றத்திற்காக, மதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.