திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க.வின் வெற்றிக்குக் காரணம், தமிழ்நாட்டைப் பின்னோக்கி இழுக்க முயன்ற சக்திகளை எதிர்த்துப் போராடியதும், எந்த ஒரு செயலையும் ஆராய்ந்து நிதானத்துடன் செய்வதும் தான் என்றார்.
பல சோதனைகள் வந்தபோதும் தி.மு.க. தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டிருக்க அதன் ஆழமான அடித்தளமும், மக்களைச் சந்தித்து கட்சியை வளர்த்ததும் தான் அடிப்படை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பில், உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளை மு.க.ஸ்டாலின் பாராட்டினார். உதயநிதி, தனது பொறுப்பை உணர்ந்து மிகவும் சக்தி வாய்ந்தவராகச் செயல்படுகிறார் என்றும், கொள்கை ரீதியாகக் கட்சியை வலுப்படுத்தப் பாசறை கூட்டங்களை நடத்தியுள்ளார் என்றும் கூறினார்.
உதயநிதியின் துடிப்பான செயல்பாடு, கொள்கை எதிரிகளை “Most Dangerous” என்று புலம்ப வைக்கும் அளவுக்கு இருக்கிறது எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் புதிய பேச்சாளர்களை உருவாக்கி ‘அறிவுத்திருவிழா’வை நடத்தியதாகவும் குறிப்பிட்டார். இறுதியாக, தி.மு.க.வின் தோளில் தமிழ்நாட்டைக் காக்கும் கடமை மட்டுமின்றி, இந்தியாவையே காக்க வேண்டிய கடமையும் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் பேசி முடித்தார்.
