திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். ‘மாஸா, கெத்தா’ எனத் தனது பேச்சைத் தொடங்கிய அவர், அமைச்சர் எ.வ.வேலுவின் ஏற்பாடுகளைப் பாராட்டினார்.
இளைஞர்களின் எழுச்சிமிகு கூட்டத்தைப் பார்க்கையில், அரை நூற்றாண்டுப் பின்னோக்கிப் பயணித்த உணர்வு ஏற்பட்டதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்துப் பேசிய அவர், “உதயநிதி மிகவும் ஆபத்தானவர் என்று எதிரிகள் புலம்புகிறார்கள்; அவர் தனது பொறுப்பை உணர்ந்து பவர் புல்லாக செயல்படுகிறார்; இன்னும் சொல்லப்போனால் இறங்கி அடிக்கிறார்” என்று பாராட்டினார்.
பீகாரைப் போலத் தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துக்குப் பதிலளித்த முதல்வர், “அமித்ஷா அவர்களே, உங்களுடைய சங்கிபடையையே கூட்டிட்டு வந்தாலும் உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது; தமிழ்நாட்டை வெல்ல முடியாது” என்று சவால் விடுத்தார்.
அன்பாக வந்தால் அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடி பணிய மாட்டோம்; எதிர்த்து வென்று காட்டுவோம் என்று முழங்கிய அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர் அணியினர் கடுமையாக உழைத்து திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
