சண்டிகரில், 11ஆம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) காலையில் பள்ளிக்குச் செல்ல உபர் பைக் முன்பதிவு செய்தபோது, அந்த ஓட்டுநரால் பாலியல் தொல்லைக்கு ஆளானச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்ச்குலாவிலிருந்து செக்டார் 40-ல் உள்ள பள்ளிக்குச் சென்றபோது, அந்த ஓட்டுநர் ஒரு கையால் பைக்கை ஓட்டிக்கொண்டே, மற்றோர் கையால் மாணவிக்குத் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

மாணவி எதிர்ப்புத் தெரிவித்தும் அந்த நபர் நிற்காததால், அவர் ஆதாரத்துக்காகத் தன் செல்போனில் இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

சத்தம் போட்டு உதவி கேட்டும், ஓட்டுநர் பைக்கை வேகமாகக் கொண்டு சென்று மிரட்டியுள்ளார். சில நிமிடங்களில் செக்டார் 37/38 சௌக் அருகே பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், மாணவிக்குக் காலில் காயம் ஏற்பட்டது.

விபத்து நடந்தவுடன் அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். காயமடைந்த நிலையிலும், மாணவி தனது பள்ளிக்குச் சென்றுத் தேர்வை முடித்துள்ளார்.

பின்னர், அவர் போலீஸில் புகார் அளித்து, தான் எடுத்த வீடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளார். மாணவியின் புகாரின் பேரில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த உபர் பைக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.