தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அத்தேர்தலில் பாஜக சார்பில் எல்.முருகன், எச்.ராஜா, அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போட்டியிட்ட போதிலும், காந்தி (நாகர்கோவில்), நயினார் நாகேந்திரன் (நெல்லை), வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), சரஸ்வதி (மொடக்குறிச்சி) ஆகிய நான்கு பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால், இந்த முறை பாஜக 53 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அ.தி.மு.க. தலைமையிடம் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த 2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்த சட்டசபைத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த 53 தொகுதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் 15-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ள நிலையில், அவரது மூலம் அ.தி.மு.க. தலைமையிடம் இந்த தொகுதி பட்டியலை வழங்க தமிழக பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக பட்டியலிட்டுள்ள 53 தொகுதிகளில், சென்னையில் மட்டும் 8 தொகுதிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி பாஜக கோரியுள்ள தொகுதிகள் வருமாறு:

சோளிங்கர், எழும்பூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, கொளத்தூர், மயிலாப்பூர், தியாகராயநகர், வேளச்சேரி, விருகம்பாக்கம், கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், பாலக்கோடு, ஒட்டன்சத்திரம், பவானி, சங்கராபுரம், குளச்சல், கன்னியாகுமரி, கிள்ளியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, குளித்தலை, ஓசூர், தளி, மதுரை தெற்கு, ராசிபுரம், குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, பெரம்பலூர், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், வால்பாறை, பரமக்குடி, தென்காசி, போடி, ஒட்டப்பிடாரம், ஸ்ரீரங்கம், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், ஆம்பூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், அருப்புக்கோட்டை.

மேலும், அ.தி.மு.க.விடமிருந்து 17 தொகுதிகளை பெற்றுக்கொண்டு, அவற்றை தங்கள் வழியாக கூட்டணியில் இடம்பெறும் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கி தேர்தலை சந்திக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பாஜகவின் இந்த தேர்தல் கணக்கீடு மற்றும் அதிக தொகுதி கோரிக்கையை அறிந்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.