உத்தரப் பிரதேசத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் (Purvanchal Expressway) சாலைப் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட சி.சி.டி.வி. (CCTV) கேமராக்களைப் பயன்படுத்தி, ஒரு கும்பல் கடத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டச் சம்பவம் அம்பலமாகியுள்ளது.
இதில், திருமணமானத் தம்பதிகள் உள்ளிட்டப் பயணிகளின் தனிப்பட்டத் தருணங்களைப் பதிவு செய்த ஊழியர்கள், அவர்களைத் துரத்திச் சென்று வீடியோக்களைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து முதல்வரின் அலுவலகத்திற்குக் (CM Office) புகார் சென்றதையடுத்து, உதவி மேலாளர் அஷுதோஷ் சர்க்கார், போக்குவரத்து மேலாளர் சஷாங்க் சேகர் உட்பட நான்கு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில், சர்க்கார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வீடியோக்களைப் பரப்பிய சஷாங்க் சேகர் தலைமறைவாக உள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே இதுபோன்றப் பதிவுகள் ‘ஆயிரக்கணக்கான முறை’ எடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முறையின் நம்பகத்தன்மை குறித்துப் பெரியக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
