ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசிலிப்பட்டினத்தில், சாலைகளில் சுற்றித் திரிந்த ஒரு பசு நடுநகரில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த கால்நடை மருத்துவக் குழுவினர், பசுவுக்குச் சிகிச்சை அளித்தனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சிக்கலான அறுவை சிகிச்சையில், பசுவின் வயிற்றிலிருந்து சுமார் 52 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக், பாலிதீன் மற்றும் பிற கழிவுகள் அகற்றப்பட்டன.

நகரங்களில் உணவு தேடி அலையும் கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் அவற்றின் வயிற்றில் இத்தகைய அபாயகரமான பொருட்கள் சேருவது கவலை அளிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது பசுவின் உடல்நிலை சீராக உள்ளது.

சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுவதாகவும், கால்நடைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டிய பொதுமக்கள், கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து தெருவில் திரியும் மாடுகளைப் பராமரிக்கவும், நகரில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.