தனது தேன் குரலால் ரசிகர்களைக் கவர்ந்த பாடகி சின்மயி, ஒரு பாடகியாக மட்டுமின்றி, ஒரு துணிச்சலான சமூகச் செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். ‘மீ டூ’ குற்றச்சாட்டுகள் எழுந்தபோது திரைத்துறையில் இவர் குரல் ஓங்கி ஒலித்தது. இதன் காரணமாகப் பல சர்ச்சைகளைச் சந்தித்து, திரையுலகில் புறக்கணிக்கப்பட்ட அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாடத் தொடங்கினார்.

தற்போது, பொதுவெளியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், குறிப்பாகச் சமூக வலைதளங்களில் நடக்கும் மிரட்டல்கள் மற்றும் இழிவுபடுத்துதல் குறித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சின்மயி சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், மார்பிங் புகைப்படங்கள் மற்றும் டீப்ஃபேக் (Deepfake) மிரட்டல்கள் குறித்துப் பேசியுள்ளார். பெண்களுக்கு அடிபணிய வேண்டும் என்று ஆணாதிக்க சமூகம் எதிர்பார்ப்பதாகவும், கேள்வி கேட்கும் பெண்களைச் சூனியக்காரி, விலைமாது என்று சொல்லி வந்தவர்கள் இப்போது ஏஐ மூலம் மார்ஃபிங் புகைப்படங்களை உருவாக்கி மிரட்டுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தனிப்பட்ட தாக்குதல் அல்ல; பெண்களுக்கு எதிரான தொடர்ச்சியான அவமானம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். “இந்தக் குரூர புத்தி கொண்ட ஆண்களைப் பார்த்து நாமோ, நமது குடும்பத்தினரோ பயப்படத் தேவையில்லை. நான் இப்படிப்பட்ட விஷயங்களால் மிரண்டு போகும் பெண் அல்ல. எனது டீப்ஃபேக் புகைப்படங்களால் எனக்கோ, என் குடும்பத்திற்கோ எந்த வெட்கமும் இல்லை. இந்தச் சிக்கல்களுக்கு எதிராகத் தைரியமாகச் செயல்பட வேண்டும்” என்று அவர் பெண்கள் அனைவருக்கும் தைரியம் அளித்துள்ளார். சின்மயியின் இந்தத் துணிச்சலான பேச்சுக்கு இணையவாசிகள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.