உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பரபரப்பான அபு லேன் சந்தை பகுதியில் 25 வயதுடைய உணவு விடுதி உரிமையாளர், தனது வணிகப் பங்குதாரருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. காரை முச்சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் வழிமறித்து, காரை தாக்கியுள்ளனர்.

 

இதிலிருந்து அவர் தப்பிச் செல்ல முயன்றபோது, மேலும் மூன்று நான்கு இளைஞர்கள் சேர்ந்து காரை வழிமறித்து, அதில் இருந்தவர்களை வெளியே வரச் சொல்லி மிரட்டியுள்ளனர். கார் உரிமையாளர் மறுத்தபோது, அவர்களில் ஒருவர் காரின் முன் பகுதிக்கு ஏறிச் சென்று கண்ணாடியை உடைத்து, பக்கவாட்டுக் கண்ணாடிகளை நொறுக்கி, பின் பகுதிக் கண்ணாடியையும் சேதப்படுத்தியதுடன், மரண மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை அருகிலிருந்த ஒருவர் காணொளி எடுத்த நிலையில், தாக்குதல் நடத்திய கும்பல், காரைச் சூழ்ந்து கொண்டு பெண்ணை துன்புறுத்தியதாகவும், காரை அனைத்துப் பக்கங்களிலும் தாக்கியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக பெண் வணிகப் பங்குதாரர் அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இருபது வயதுடைய நான்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை அன்று கைது செய்யப்பட்டனர்.