கொல்கத்தாவில் நடைபெற்ற பகவத் கீதை பாராயண நிகழ்ச்சியின் போது, சிக்கன் பாட்டிஸ் விற்ற வியாபாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். காவல்துறை வட்டாரங்களின்படி, கைது செய்யப்பட்டவர்கள் சௌமிக் கோல்டர், ஸ்வர்ணேந்து சக்ரவர்த்தி, மற்றும் தருண் பட்டாச்சார்யா ஆவர்.

 

கீதை பாராயண நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு அருகில் அசைவ உணவு விற்றதற்காக அந்த வியாபாரியை மூன்று பேர் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலில், அந்த வியாபாரியை காதை பிடித்து உட்கார்ந்து எழும்படி கேட்டுள்ளனர். பின்னர், அந்த வியாபாரி தனது பெயர் ஷேக் ரியாஜுல் என்று கூறியதும், அங்கிருந்தவர்கள் அவரைத் திட்டி தாக்கியுள்ளனர்.

இதனிடையே, கிருஷ்ணாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தன் அரசானது மதங்களுக்கு இடையே பாகுபாடு காட்டுவதில்லை என்று குறிப்பிட்டு, ஏழை வியாபாரியைத் தாக்கியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர் எனக் கூறினார். மேலும், தர்மம் என்றால் தூய்மையான எண்ணங்கள், மனிதநேயம், அமைதி என்று பொருள்.

தர்மம் என்றால் வெறுப்பு அல்ல, பிளவு அல்ல என்று கீதையின் சாரம் குறித்து பாராயணம் செய்த பாஜக தலைவர்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அதே சமயம், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கைது செய்யப்பட்டவர்களுக்கு அனைத்து சட்ட உதவிகளையும் வழங்குவதாகக் கூறியுள்ளார்.