பீகாரில் ரயிலில் பிச்சை எடுத்துவரும் இளம் பெண்ணை ஒரு இளைஞர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பரவலான பாராட்டுகளைப் பெறுகிறது.

பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த கோலு யாதவ் ரயில் பயணத்தின் போது பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இளம்பெண்ணை கவனித்தார். அவளிடம் சிலர் தவறான முறையில் நடந்துகொள்ள முயன்றதை பார்த்த அவர், பெண்ணை பாதுகாப்பாக இருக்கச் செய்வதற்காக உதவி செய்து, பின்னர் அவளை தனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

பக்ஸரில் வீடு திரும்பிய கோலு யாதவ், பெண்ணின் நிலையை தனது குடும்பத்தினரிடம் விளக்கினார். அவளது பின்னணி, அவள் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தையும் அறிந்த பெற்றோர், அவளுக்கு அடைக்கலம் அளிக்க முன்வந்தனர்.

பின்னர் குடும்பத்தின் முழு சம்மதத்துடன், கோலு யாதவ் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரவேற்பைப் பெற்றுள்ளன. ரெடிட்டில் “இது ஒரு அழகான திரைப்படக் கதை போல உள்ளது” என்ற தலைப்பில் பகிரப்பட்ட புகைப்படங்களுக்கு பலரும் பாராட்டு கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

ஒரு பயனர் “அக்‌ஷய் குமார் இதை படம் எடுப்பார் போல!” என குறிப்பிட, மற்றொருவர் “அவளின் வாழ்க்கையை மாற்றியதோடு, தன் வாழ்க்கையையும் இணைத்துள்ளார். இது நேரடியாக பாலிவுட் கதையே” என கருத்துத் தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவம், பிச்சை எடுத்துக்கொள்வோரையும் மனிதநேயத்தோடு அணுக வேண்டும் என்ற செய்தியை சமூகத்திற்கு நினைவூட்டியுள்ளதாக பலரும் குறிப்பிடுகின்றனர்.