சென்னை தண்டையார்பேட்டைப் பகுதியில் கடந்த 2020 முதல் 2023-ஆம் ஆண்டு வரை 18 வயது இளம்பெண் ஒருவரை அவரது தந்தையும், அண்ணனும் பாலியல் வன்கொடுமை செய்து வந்த வழக்கில், தந்தையையும் மகனையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண் 2023 டிசம்பர் 28 அன்று திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (டிசம்பர் 10) நீதிபதி உமாமகேஸ்வரி தீர்ப்பளித்தார். பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தை, மகன் ஆகிய இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நிவாரணமாகத் தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.