இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் இடம் பெறுவதற்குக் காரணமாக இருந்த ஒரு முக்கியமான சம்பவத்தை அவர் இப்போது நினைவுகூர்ந்துள்ளார். 1989-ஆம் ஆண்டு இரானி கோப்பை போட்டிதான் சச்சினுக்கு இந்திய அணியில் இடம் பெற ஒரு வாய்ப்பாக (Trial Match) அமைந்தது. 15 வயதில் அந்தப் போட்டியில் அவர் சதம் அடித்த பிறகுதான், இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவர் சதம் அடிக்க உதவியவர், சக வீரர் குர்ஷரன் சிங்.

குர்ஷரன் சிங்குக்கு அப்போது கை உடைந்திருந்தது. ஆனாலும், சச்சின் சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக, அவர் உடைந்த கையுடன் களத்தில் இறங்கி பேட்டிங் செய்தார். அந்த உதவி என் மனதைத் தொட்டது என்று சச்சின் தெரிவித்துள்ளார். குர்ஷரன் சிங் செய்த இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சச்சின் ஒரு வாக்குறுதி அளித்தார். “நீங்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, உங்களுக்குப் பணப் பலனுக்கான போட்டி (Benefit Match) நடக்கும்போது, நான் வந்து நிச்சயம் விளையாடுவேன்” என்று 1990-இல் உறுதி அளித்தார்.

அதன்படி, 15 வருடங்களுக்குப் பிறகு 2005-ஆம் ஆண்டு குர்ஷரன் சிங் ஓய்வு பெற்றபோது அவருக்கு நடந்த போட்டியில், சச்சின் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி விளையாடினார். தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியது தனக்கு இப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாக சச்சின் நெகிழ்ச்சியுடன் கூறினார்.